இந்தியாவுடன் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு மேற்கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்று அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அயலுறவு இணையமைச்சர் ஈவன் ஏ ஃபெய்ன்பாம் கூறினார்.
கொல்கத்தாவில் இன்று அமெரிக்கக் குடிமக்கள் சேவைகள் அலுவலகத்தைத் திறந்து வைத்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஃபெய்ன்பாம், "அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டு விவகாரத்திற்கு நல்லவிதமான தீர்வை எட்டுவதற்கு நாங்கள் உறுதியுடன் முயற்சித்து வருகிறோம்" என்றார்.
உலகளவில் ஏற்பட்டுள்ள மின்தட்டுப்பாட்டிற்கு ஒரே தீர்வு அணுசக்திதான் என்ற அவர், எதிர்காலத் தலைமுறையினருக்கு எரிசக்திப் பாதுகாப்பை உருவாக்க வேண்டும் என்றார்.
"அணுசக்தி ஒத்துழைப்பு விடயத்தில் இந்திய அரசு பின்பற்றும் வழிமுறைகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்த வருகிறோம். இந்த உடன்பாடு எங்களுக்கு தேவை என்பதுடன் இந்தியாவின் நலன்களுக்கு மிகவும் முக்கியமானது" என்று ஃபெய்ன்பாம் குறிப்பிட்டார்.