அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. வின் இயக்குநர் மைக்கேல் ஹைடனிற்குக் கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் வடமேற்கு மாகாணச் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
'பாகிஸ்தானில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளால் அமெரிக்காவிற்கு ஆபத்து' என்று ஹைடன் கூறியதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட இக்கண்டனத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான விவகாரங்கள் அர்த்தமுள்ள அமைதிப் பேச்சின் மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்று அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்தைத் தாக்கல் செய்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைவர் பிர் சபீர் ஷா, சி.ஐ.ஏ. இயக்குநரின் கருத்து பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிடுவதாக மட்டுமல்ல, நாட்டின் இறையாண்மை மீதான நேரடித் தாக்குதலாகவும் அமைந்துள்ளது என்றார்.
"பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்களும், வெடிகுண்டுத் தாக்குதல்களும், பேரழிவுகளும் நடக்கின்றது என்றால், அது அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசியலால் மட்டும்தான்" என்று பிர் சபீர் ஷா கூறியதாக தி நேஷன் தெரிவிக்கிறது.