திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவின் மீது சீனா கூறியுள்ள குற்றச்சாற்றுகளை மறுத்துள்ள அமெரிக்கா, அவர் அமைதியின் தூதுவர் என்று பாராட்டியுள்ளது.
திபெத் கலவரங்களைத் தூண்டிவிடும் தலாய் லாமா ஒரு காட்டுமிராண்டி என்றும், அவருடைய ஆதரவாளர்கள் தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடத் திட்டமிட்டு வருவதாகவும் சீனா குற்றம்சாற்றி இருந்தது.
இதுகுறித்து அமெரிக்கா சார்பில் கருத்துத் தெரிவித்த அந்நாட்டு அரசின் கூடுதல் பேச்சாளர் டாம் கேசே, "திபெத் விவகாரத்தில் உள்ள சில சிக்கலான விடயங்களை தீர்ப்பதற்கு பேச்சு நடத்துவதற்காக சீனாவை அழைக்கும் தலாய் லாமா ஒரு அமைதியின் தூதுவர்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "தலாய் லாமாவுடனும் அவரது பிரதிநிதிகளுடனும் சீனா பேச்சு நடத்த வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். நீண்டகாலமாகத் தொடரும் இதுபோன்ற விவகாரங்களைப் பேச்சின் மூலம் மட்டுமே தீர்க்க முடியும்.
வன்முறைகளை வெறுத்து அமைதியான வழியில் பேச்சு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தும் தலாய் லாமாவையும், அவரை ஆதரிப்பவர்களையும் அமெரிக்கா வாழ்த்துகிறது" என்றார் அவர்.