மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரின் சம உரிமைகளுக்காகப் பேரணி நடத்தியதை முன்னிட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹின்ட்ராஃப் தலைவர்கள் 5 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மலேசிய அரசிற்கு கொடுக்கப்படும் அழுத்தம் அதிகரித்துள்ளது.
தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணையின்றிக் காலவரையற்றுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹின்ட்ராஃப் தலைவர்கள் 5 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் லிம் கிட் சியாங்குடன் அந்நாட்டு முன்னாள் அமைச்சர் டத்தோ சாமி வேலுவும் இணைந்துள்ளார்.
சிறையில் இருக்கும் ஹின்ட்ராஃப் தலைவர் எம்.மனோகரன் (வயது 46) மார்ச் 8 ஆம் தேதி நடந்த மலேசியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார் என்பதாலும், மற்றொரு தலைவர் ஆர்.கங்காதரன் (வயது 48) உடல்நலக் குறைவினால் அவதிப்படுபவர் என்தாலும், இவர்கள் இருவரும் உறுதியாக உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று சாமி வேலு கூறியுள்ளார்.
இதேபோல, கோலாலம்பூரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி ஏற்பாட்டில் தொடர்பில்லாத வி.கணபதி ராவ் (வயது 34), கே.வசந்த குமார் (வயது 34), பி.உதயகுமார் ஆகியோரும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் சாமி வேலு வலியுறுத்தியுள்ளார்.
ஹின்ட்ராஃப் தலைவர்களை விடுவிக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளதற்கு அரசியல்தான் காரணம் என்பதைத் திட்டவட்டமாக மறுத்த டத்தோ சாமி வேலு, "இது ஒன்றும் நாடகமல்ல. நாங்களும் இந்தியர்கள் என்ற அடிப்படையில் சிறையில் உள்ளவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்" என்றார்.
அதேநேரத்தில், மலேசியப் பொதுத் தேர்தல் முடியும் வரை ஹின்ட்ராஃப் தலைவர்கள் கைது செய்யப்பட்ட நடவடிக்கையை சாமி வேலு ஆதரித்து வந்தார் என்பதையும், தேர்தலில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்த பிறகு தனது முடிவை அவர் தலைகீழாக மாற்றிக் கொண்டுள்ளார் என்பதையும் அரசியல் நோக்கர்கள் குறிப்பிட்டு விமர்சித்துள்ளனர்.