திபெத் விவகாரத்தை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு திபெத்தியர்களுடன் சீன அரசு அர்த்தமுள்ள பேச்சு நடத்த வேண்டும் என்று மதத் தலைவர் தலாய் லாமா மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திபெத்தில் இருந்து வெளியேறி தர்மசாலாவில் தங்கியிருக்கும் தலாய் லாமா இன்று விடுத்துள்ள அறிக்கையில், "சீன ஆட்சியாளர்கள் தங்கள் அறிவைப் பயன்படுத்த வேண்டும் என்றும், திபெத்தியர்களுடன் அர்த்தமுள்ள பேச்சைத் துவங்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
அறிக்கையில், சீனச் சகோதர சகோதரிகளே என்று குறிப்பிட்டுள்ள அவர், பேச்சின்போது திபெத் விடுதலையைப் பற்றியோ அல்லது திபெத்தியர்கள் நலனிற்கு எதிரானவற்றையோ தான் கேட்கப்போவதில்லை என்றும் உறுதியளித்துள்ளார்.
தனது நிலையை சீன ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள தலாய் லாமா, உண்மையின் அடிப்படையில் திபெத் விவகாரத்தைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், பெய்ஜிங்கில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு தனது முழுமையான ஆதரவையும் அவர் தெரிவித்துள்கார்.