காஷ்மீர் பிரச்சனை அமைதியான வழியில் பேச்சுக்கள் மூலம் தீர்க்கப்படும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆஷிப் அலி ஜர்தாரி நம்பிக்கை தெரிவித்தார்.
இஸ்லாமாபாத்தில் இன்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆஷிப் அலி ஜர்தாரி, காஷ்மீர் பிரச்சனை பற்றிக் கூறியதாவது:
காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்கும் விடயத்தில் நாங்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளோம். இந்தப் பிரச்சனை மறைமுகமாகக் கூடத் தொடர்வதை நாங்கள் விரும்பவில்லை.
காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதிப் பேச்சுக்களை பாகிஸ்தான் அரகு தொடர்ந்து நடத்தும்.
இவ்விடயத்தில் பாகிஸ்தானின் முந்தைய ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ள முன்னேற்றங்களும், நம்பிக்கைகளும் புதிய அரசால் தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.
அமைதிப் பேச்சுக்களை தற்போதுள்ள நிலையில் இருந்து மேலும் முன்னெடுத்துச் சென்று பிரச்சனையைத் தீர்ப்பது மட்டுமே எங்கள் நோக்கம் ஆகும்.
ஜனநாயகவாதிகள் அமைதியை மட்டுமே விரும்புவார்கள் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியும், அதனுடன் நிற்கும் மற்ற ஜனநாயக இயக்கங்களும் எப்போதும் கூறிவருகின்றன.
நாங்கள் அமைதியை விரும்புகிறோம். எங்கள் செய்தியும் அதுதான். பாகிஸ்தானின் எல்லா எல்லைகளிலும் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
துப்பாக்கிகள் புதைகுழிக்குப் போக வேண்டும். தற்போதைய தலைமுறையினரும், கடந்த காலத் தலைமுறையினரும் செய்த தவறுகளை வருங்காலத் தலைமுறையினர் தொடரக் கூடாது. அவர்கள் கைகளில் பேனாக்களை பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.