வளர்ந்த நாடுகள் பட்டியலில் (ஜி-8) ரஷ்யாவை நீக்கிவிட்டு இந்தியாவைச் சேர்க்கலாம் என்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் ஜான் மெக்கைன் கூறியுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த பன்னாட்டு விவகாரங்கள் குழுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், "வளர்ந்து வரும் பொருளாதார சூழலுக்கேற்ப தொழில் வளர்ச்சியில் முன்னேறிய நாடுகளின் பட்டியலை விரிவுபடுத்த வேண்டியது அவசியம். அதேசமயம் அணுசக்தி மூலம் மிரட்டும் ரஷ்யாவின் போக்கை சகித்துக் கொள்ள முடியாது. இந்த பட்டியலிலிருந்து ரஷ்யாவை நீக்கிவிட்டு இந்தியா மற்றும் பிரேசிலை சேர்க்கலாம்" என்றார்.
தொழில் வளர்ச்சியடைந்த நாடுகள் பட்டியலில் கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேஸில் ஆகிய 8 நாடுகள் உள்ளன. உலகின் மொத்த பொருளாதாரத்தில் 65 விழுக்காடு இந்த நாடுகள் வசமே உள்ளன.
உறுப்பினர் அல்லாத வளர்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா, பிரேஸில், சீனா, மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
பருவநிலை மாற்றம்!
பருவநிலை மாற்றம் பற்றி மெக்கைன் கூறுகையில், "புவி வெப்பமடையும் பிரச்சனை உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது. புவியை பாதுகாக்க அனைவருமே முயற்சி மேற்கொள்ள வேண்டும். புவி வெப்பமடைவதால் அனைவருக்குமே பாதிப்பு ஏற்படும் என்பதை உணர வேண்டும்.
பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. வரும் சந்ததியினருக்கு ஒரு பாதுகாப்பான புவியை விட்டுச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது" என்றார்.