பாகிஸ்தான் அரசியல் விவகாரங்களில் ஒருபோது தலையிடப் போவதில்லை என்றும், அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பின் எதிர்காலத்தைப் பாகிஸ்தான் மக்கள்தான் முடிவுசெய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
பாகிஸ்தானில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், அமெரிக்க அயலுறவு இணை அமைச்சர்கள் ஜான் நெக்ரோபோண்டெ, ரிச்சர்ட் பெளச்சர் ஆகியோர் அந்நாட்டில் அறிவிக்கப்படாத சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இது பல்வேறு சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ள நிலையில், இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜான் நெக்ரோபோண்டெ, பாகிஸ்தான் அரசியல் விவகாரங்களில் அமெரிக்கா ஒருபோதும் தலையிடாது என்றார்.
தங்கள் பயணம் ஒரு மறைமுகமானது அல்ல என்ற அவர், பாகிஸ்தானிற்கு அமெரிக்கா வழங்கியுள்ள ராணுவ உதவிகள் அரசியலில் தலையிடப் போவதற்கான அறிகுறி அல்ல என்றார்.
மேலும், "முஷாரஃப் பாகிஸ்தான் நாட்டின் அதிபர். பாகிஸ்தானியர்கள் தங்கள் அதிபர்பற்றி என்ன முடிவை எடுத்தாலும் அதை அமெரிக்கா மதிக்கிறது.
நாங்கள் மட்டும் பாகிஸ்தானிற்கு வரவில்லை. எங்களைப் போல மேலும் ஆறு அயல்நாட்டுக் குழுக்கள் பாகிஸ்தானிற்கு வந்துள்ளனர். இந்தப் பயணம் ஆறு வாரங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது" என்றார் நெக்ரோபோன்டெ.