பாகிஸ்தானில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசுடனான உறவு குறித்த சந்தேகம் அடைந்துள்ள அமெரிக்கா, பாகிஸ்தானில் உள்ள அல் கய்டா மறைவிடங்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதிபர் முஷாரஃப் ஆட்சியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்திற்கு அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது. பாகிஸ்தானில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதால் விரையில் அந்த ஒத்துழைப்பு பலவீனப்படலாம் என்பதால், முடிந்தவரை அல் கய்டாவுக்கு சேதத்தை ஏற்படுத்த அமெரிக்க திட்டமிட்டுள்ளது. இத்தகவலை அந்நாட்டின் அதிகாரிகள் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில், அல் கய்டா நடத்த முயன்ற மூன்று விமான தாக்குதலை அமெரிக்கா முறியடித்துள்ளது.
இந்த தாக்குதல்களை அடுத்து, அதிபர் முஷாரஃப், ராணுவத் தலைமைத் தளபதி ஆஷ்பஃக் கியானி ஆகியோர் பாகிஸ்தானில் உள்ள அயல்நாட்டு தீவிரவாதிகளிடம் போரிட அமெரிக்காவுக்கு அனுமதி அளிதது. ஆனால், பாகிஸ்தானில் உள்ள தலிபான்களுக்கு எதிராக போரிட எந்த ஒத்துழைப்பும் அளிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தாகுதலை தீவிரப்படுத்தி ஒசாமா பின் லேடன் உட்பட அல்-கய்டா முக்கிய தலைவர்கள், படை தளபதிகள் ஆகியோர் பற்றிய தகவல்களை பெற அமெரிக்க புலானாய்வு பிரிவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிபர் ஜார்ஜ் புஷ் பதவி விலகுவதற்குள் பின் லேடனை பிடித்துவிட வேண்டும் என்பதை மையப்படுத்தி இந்த திட்டத்தை வகுக்கவில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"பின் லேடனின் சகாப்தத்தை முடித்துவிடுவதற்காக அல்ல. உரிய தலைமை ஒத்துழைப்பு கிடைத்தால், அதற்கான நடவடிக்கையில் இறங்குவோம். ஆனால், இந்த 9 மாதங்களில் அல்-கய்டாவை வெளியேற்ற முடியாது. அதனை நிறைவேற்ற தற்போதைய அரசிற்கு பிறகும் நடவடிக்கைகளை தொடர வேண்டியிருக்கும்" என்று அயலுறவு குழு மூத்த அதிகாரி டேனியல் மார்க்கி கூறினார்.
"பாகிஸ்தான் அரசின் புதிய தலைமை எவ்வாறான உறவை அமெரிக்காவுடன் வைத்துக்கொள்ளும் என்று தெரியவில்லை. அவர்களை குற்றம் கூறவும் முடியாது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு பிறகு புஷ் நிர்வாகமும், முஷாரஃப் அரசும் மேற்கொண்டுள்ள உறவு மவுனமாகி விடும். அமெரிக்காவின் புதிய அரசால் அல்-கய்டாவுக்கு எதிரான போராட்டம் எல்லைப் பகுதிகளில் நடக்கலாம். இது இரண்டு தரப்பிலும் வெளிப்படையாக பேச வேண்டிய முக்கிய விவகாரம் என்று மற்ற அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், பென்டகன் பேச்சாளர் ஜியோப் மோரெல் இவற்றை மறுத்துள்ளார். "அல்-கய்டாவுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தும் முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை" என்ற அவர், "எதிரிகளை சந்திக்க உள்ளோம். பாகிஸ்தானுடனான ஆலோசனை, ஒத்துழைப்புடன் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றும் கூறியுள்ளார்.