இலங்கையில் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி காவல்துறை உயரதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர். சிறப்பு அதிரடிப்படை உயர் அதிகாரி ஒருவர் உட்பட 2 அதிரடிப்படையினரும், 2 காவலர்களும் படுகாயமடைந்தனர்.
காஞ்சிரங்குடா மணல்காடு என்ற இடத்தில் இன்று (புதன்கிழமை)காலை 9:10 மணியளவில் இத்தாக்குதல் நடந்துள்ளது என்று புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
மட்டக்களப்பு உன்னிச்சை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டடப் பணிகளைப் பார்வையிடுவதற்காக இன்று காலை ஜப்பானியத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அதிகாரிகள் செல்லவிருந்தனர்.
அவர்களின் பயணத்தை முன்னிட்டு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் சென்றபோது இத்தாக்குதல் நடந்துள்ளது.
"பலகை ஒன்றின் கீழ் வீதியோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி தூரத்திலிருந்து இயக்கப்படும் கருவி மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது" என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். படுகாயமடைந்த மற்றொரு காவல்துறை அதிகாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
படுகாயமடைந்த 2 அதிரடிப்படையினரும் 2 காவல்துறையினரும் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.