இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் சிறிலங்கா அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் அமைதிப் பேச்சிற்குத் திரும்ப வேண்டும் என்று தென் ஆப்பிரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை இனப் பிரச்சனை தொடர்பாக தென் ஆப்பிரிக்க தொலைத் தொடர்பு இணையமைச்சர் இராதாகிருஷ்ண பட்டாயாச்சி லண்டனில் பி.பி.சி.யின் சிங்கள சேவையான சந்ததேசியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
இலங்கை இனப் பிரச்சனைகளுக்கு இறுதித் தீர்வு காண்பதில் தென் ஆப்பிரிக்க அரசு தொடர்ந்து உறுதியாக உள்ளது.
சிறிலங்க அரசையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் அமைதிப் பேச்சிற்குத் திரும்ப வைப்பதே எங்களின் நோக்கமாகும். பேச்சுக்களே இப்பிரச்சனைக்கான தீர்வை ஏற்படுத்தும்.
சர்வதேச நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவை சிறிலங்க அரசையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் பேச்சிற்குத் திரும்ப வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த வார இறுதியில் பிரிட்டனில் உள்ள கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் நடந்த "இலங்கையின் இனப் பிரச்சனை" என்னும் தலைப்பிலான சர்வதேச மாநாட்டில் தென் ஆப்பிரிக்கா சார்பில் தொலைத் தொடர்பு இணையமைச்சர் இராதாகிருஷ்ண பட்டாயாச்சி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.