இலங்கைத் தமிழர்களை அடக்கி ஆள்வதற்கான ஆயுதமாக உணவை சிறிலங்க அரசு பயன்படுத்தி வருகிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம்சாற்றி உள்ளனர்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிக்கையில், "தமிழர்கள் மீதான முதலாவது தடையாக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாவது தடையாக உணவு, மருந்து, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் உள்ளது. மூன்றாவது தடையாக வெளி உலகத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இத்தடைகள் சிறுவர்களை அதிகம் பாதித்து வருகின்றது. சத்துக் குறைவு, சிறார் தொற்று நோய்கள் போன்றவை அதிகரித்துள்ளன. அதைப் போர் நிறுத்த காலத்தில் சுற்றுப் பயணம் செய்தவர்கள் அறிந்திருந்தனர்.
இந்த நிலை ஒவ்வொரு வாரமும் மோசமடைந்து வருகிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகங்களும், ஐ.நா. சபையின் உலக உணவு நிறுவனமும், சர்வதேச நாடுகளும் இதை சிங்கள அரசிடம் எடுத்துச் சென்றும் எந்தப்பயனும் இல்லை
"பிரிட்டனிடம் இருந்து அதிகாரத்தைப் பெற்ற சிங்கள அரசுகள் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவ சோதனைச் சாவடிகளை அமைத்து அவர்களை அடக்கி ஆண்டு வருகின்றன.
தங்களின் உரிமைகளுக்காக தமிழர்கள் குரல் கொடுக்கத் துவங்கியதும் சிங்களப் படையினரின் இந்தச் சோதனை சாவடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
இது தமிழர்களின் மனித நேயத்தின் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தலாகும். இச்சோதனைச் சாவடிகளில் விசாரணை செய்யப்பட்ட பல தமிழர்கள் காணாமல் போய் உள்ளனர். இது தமிழர்களுக்குப் பெரும் உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், சில சோதனைச் சாவடிகளை மூடுவதன் மூலம் தமிழர்களை வெளியுலகத்தில் இருந்து சிறிலங்க அரசு அன்னியப்படுத்தி வருகிறது. கடந்த 18 மாதங்களாக யாழ். குடாநாட்டில் இந்நிலை நீடிக்கிறது. இதனால் அங்கு உணவு, அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
யாழ். குடாநாடு வெளியுலகத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள போதும் அது தொடர்பாக யாரும் எழுதுவது கிடையாது. சிங்கள அரசின் கொலை மிரட்டல்கள் காரணமாக யாழ். குடாநாட்டில் இருப்பவர்களாலும் பேச முடிவதில்லை.
கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்து தமிழர் பகுதிகளில் எரிபொருள் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இத்தடைகளால் சுனாமி நிவாரண உதவிகளை வழங்கி வந்த பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் வெளியேற்றப்பட்டு உள்ளன. இக்கட்டுப்பாடுகளை வன்னி மூன்றாம் ஈழப் போரில் இருந்து எதிர்கொண்டு வருகின்றது.
வன்னியின் மக்கள் தொகை 4,60,000 ஆகும். இதில் கிளிநொச்சியில் 2,00,000 பேரும், முல்லைத்தீவில் 2,00,000 பேரும், வவுனியாவில் 30,000 பேரும், மன்னாரில் 30,000 பேரும் வசிக்கின்றனர்" என்று கூறியுள்ளனர்.