''பாகிஸ்தானின் பிரதமராக மூன்று மாதங்கள் மட்டும் அல்ல, 5 ஆண்டுகளுக்கு யூசுஃப் ராசா கிலானியே பதவி வகிப்பார்'' என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவர் ஆஷிப் அலி ஜர்தாரி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக பாஹிம்க்கு பதிலாக கிலானியை தேர்வு செய்ததற்கான காரணத்தை கூட்டணி கட்சியினருக்கு ஏற்கனவே விளக்கி விட்டதாகவும் ஜர்தாரி தெரிவித்தார்.
மேலும், பிரதமர் பதவி வகிக்க தனக்கு விருப்பமில்லை என்று கூட்டணி கட்சியினரிடம் தெரிவித்ததாக ஜர்தாரி கூறியுள்ளார்.
"பாகிஸ்தான் மக்கள் கட்சிக்காக கிலானி சிறைக்குச் சென்று அடியாலா சிறையில் 3 மாதங்கள் உரிய வசதி இல்லாமல் கஷ்டப்பட்ட போதும் அரசியல் பதவியிலிருக்கும் நண்பர்கள், செல்வாக்கு வாய்ந்த உறவினர்களின் உதவியை நாடவில்லை" என்று ஜர்தாரி கூறியதாக மேற்கோள் காட்டி பாகிஸ்தான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கிலானி 4 வருடங்கள் சிறையில் கழித்தபோது பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு விசுவாசியாக நடந்து கொண்டார். நாங்கள் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அவர்தான் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கான சிறந்த தேர்வு என்று ஜர்தாரி கூறியுள்ளார்.
இடைக்கால பிரதமராகவே கிலானி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு ஜர்தாரி பிரதமராவார் என்றும் கூறப்பட்டு வரும் வேளையில் ஜர்தாரி இவ்வாறு கூறியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.