பாகிஸ்தான்சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர் இறந்தது குறித்து விசாரணை நடத்த வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் கடல் எல்லையில் மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2006ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவைச் சேர்ந்த லட்சுமண் காஞ்சி (40) என்பவர் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானின் லண்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் கராச்சியில் உள்ள காவல்துறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.
இதையடுத்து, காவல் துறையின் பாதுகாப்பில் இருந்த காஞ்சியின் இறப்பு குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் மனித உரிமைகள் நல அமைச்சர் அன்சர் பர்னே கூறியுள்ளார்.
மேலும், பாகிஸ்தானும், இந்தியாவும் சிறையில் அடைக்கப்ட்டுள்ள மீனவர்களின் உயிருடன் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்றும் அவசர கால நடவடிக்கையாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருநாட்டு மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காஞ்சிஇறந்ததற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்த பர்னே தனது குடும்பத்தை விட்டு பிரிந்து கடந்த இரண்டு வருடங்களாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்ட்டிருந்த அவர் பாகிஸ்தானில் இறந்தது வெக்கக்கேடான நிகழ்வு என்றும் அவர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறினார்.
காஞ்சி வயிற்று வலி காரணமாக கடந்த வாரம் பாகிஸ்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்கட்ட விசாரணையில் அவர் நோயின் காரணமாக இறந்ததாக தெரிய வந்துள்ளதாக பர்னே கூறினார்.
எனினும், காஞ்சிஇறந்ததற்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்காக, அவரது உடல் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு முன்னர் பிரதே பரிசோதனை செய்யப்படும என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.