விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கடல் புலிகள் நடுக்கடலில் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில், சிறிலங்கா கடற்படையின் அதிவேக டிவோரா படகு மூழ்கடிக்கப்பட்டது. இதில் சிறிலங்கா கப்பல் படை வீரர்கள் 10 பேரை காணவில்லை அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் முல்லைத்தீவு - நயாறு கடல் பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் விடுதலைப் புலிகள் வைத்த கண்ணிவெடி தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் அதிவேக படகு வெடித்துச் சிதறியது.
இந்த தாக்குதலில் 10 வீரர்கள் காணாமல் போயினர் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று சிறிலங்க கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இந்த தாக்குதலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 3 கறுப்பு கடல் புலிகள் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன்.
இந்த மோதல் குறித்து செய்தியளித்துள்ள தமிழ்நெட் இணையத்தளம், இன்று அதிகாலை 2.10 மணி முதல் 45 நிமிட நேரம் நடந்த தாக்குதலில் சிறிலங்க கடற்படையின் டிவோரா அதிவேக படகு முழ்கடிக்கப்பட்டதாகவும், சிறிலங்க கடற்படையினர் 14 பேர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் கூறியதாக தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் தரப்பில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது.
விடுதலைப் புலிகளுடன் எந்த மோதலும் நடைபெறவில்லை என்றும், அவர்களின் கண்ணி வெடியில் சிக்கியே தங்கள் படகு முழ்கியதாகவும் சிறிலங்க கடற்படையின் பேச்சாளர் திஸ்ஸநாயகா கூறியுள்ளார்.