சிறிலங்காவிற்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்யக்கூடாது என்று வலியுறுத்தி தென்னாப்பிர்க்க வாழ் இந்தியத் தமிழர்கள் நேற்றுக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்னாப்பிரிக்க மனித உரிமை நாள் நேற்று (மார்ச் 21) கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு டர்பன் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் இந்தியத் தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த தென்னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த மதுரை, "போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்க அரசு ஒருதலையாக வெளியேறியது தொடர்பாக இந்திய அரசு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை.
சிறிலங்கா அரசிற்கு இந்தியா வழங்கும் அனைத்து இராணுவ உதவிகளையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்" என்றார்.
முன்னதாக, கண்டன மனு ஒன்று தென்னாபிரிக்க மனித உரிமை ஆணையகத்தின் தலைவர் ஜோடி கோலப்பனிடம் வழங்கப்பட்டது.
மற்றொரு மனு இந்தியத் துணைத் தூதரகத்தில் வழங்கப்படவிருந்தது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள தூதரகம் மறுத்து விட்டது.