திபெத்தின் விடுதலை என்றில்லாமல் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுடன் சீனா பேச்சு நடத்த வேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
"தலாய் லாமா திபெத்திற்கு விடுதலை வேண்டும் என்று கேட்கவில்லை. சீன அதிகாரிகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று மட்டும்தான் கோருகிறார். இதை நாங்கள் ஆதரிக்கிறோம். நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் தலாய் லாமா மற்றும் அவரது பிரதிநிதிகளுடன் சீனா பேச்சு நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று அமெரிக்க அயலுறவு பேச்சாளர் டாம் கேசே கூறினார்.
திபெத்தில் போராடும் மக்களின் விடயத்தில் சீனா கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறிய அவர், அப்பாவி மக்கள் உயிரிழப்பதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை என்றார்.
திபெத் உள்ள பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களின் மதிப்பிற்குரிய மதத் தலைவராக தலாய் லாமா உள்ளார். சில முக்கியமான பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும், பதற்றத்தைத் தணிப்பதிலும் அவர் முக்கியப் பங்காற்றுவார் என்றும் கேசே கூறினார்.