புகழ்பெற்ற அறிவியல் கற்பனைக் கதை எழுத்தாளர் ஆர்தர் சி.கிளார்க் இன்று அதிகாலை சிறிலங்கா தலைநகர் கொழும்பில் காலமானார். அவருக்கு வயது 90.
கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 1.20 மணிக்கு கிளார்க் காலமானார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரிட்டனைச் சேர்ந்த கிளார்க் 1917 ஆம் ஆண்டு பிறந்தார். 1956 ஆம் ஆண்டு சிறிலங்காவிற்க வந்து குடியுரிமை பெற்ற அவர், தனது இறுதிக் காலம் வரை சிறிலங்காவிலேயே வாழ்ந்து வந்தார்.
கிளார்க் லண்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டப்படிப்பு படித்துள்ளார். பிறகு அறிவியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டதுடன், அறிவியல் கற்பனைக் கதைகளையும் எழுதினார்.
இவர் எழுதிய 80க்கும் மேற்பட்ட கதைகள் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளன. கதைகளில் கூறப்பட்ட பல்வேறு தொழில்நுட்ப விடயங்கள் காலப்போக்கில் நடைமுறைக்கு வந்தபோது கிளார்க்கின் புகழ் உலகெங்கும் பரவியது.