பாகிஸ்தான் நாடாளுமன்ற அவைத் தலைவராக முதல் முறையாக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு அவைத் தலைவர், அவைத் துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்கிறது.
இந்த இரண்டு பதவிகளுக்கும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் அவைத் தலைவர் பதவிக்கு ஃபாமிதா மிர்சா என்ற பெண் உறுப்பினர் போட்டியிடுகிறார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளதால், ஃபாமிதா மிர்சா எளிதில் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை ஃபாமிதா மிர்சா வெற்றிபெற்றால் பாகிஸ்தான் வரலாற்றில் நாடாளுமன்ற அவைத் தலைவராகத் தேர்வு செய்யப்படும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுவார்.
சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஃபாமிதா மிர்சா மருத்துவம் படித்தவர் என்பதும், அவரின் குடும்பமே அரசியல் சார்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல துணைத் தலைவர் பதவிக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் ஃபைசல் கரீம் குந்தி போட்டியிடுகிறார். இவரும் எளிதில் வெற்றி பெறுவார் என்று கருதப்படுகிறது.
எதிர்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (க்யூ) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் அவைத் தலைவர் பதவிக்கு சர்தார் முகமது இஸ்ரார் தரீன், துணைத் தலைவர் பதவிக்கு குஷ்பக்த் செளஜாத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மதியம் நடக்கவுள்ள ரகசிய வாக்கெடுப்பிற்குப் பிறகு வெற்றிபெறும் வேட்பாளர்கள் பதவியேற்க உள்ளனர்.