ஈராக்கில் புகழ்பெற்ற மசூதி ஒன்றில் தொழுகை முடிந்த பிறகு நடந்த தற்கொலைத் தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
ஈராக்கின் புனித நகரமான கர்பாலாவில் இமாம் ஹூசைன் மசூதி உள்ளது. இங்கு நேற்று மாலை தொழுகை முடிந்த பிறகு நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது மசூதியில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
இத்தாக்குதலில் சுமார் 49 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதனால் வீதியெங்கும் ரத்த வெள்ளமாகக் காட்சியளித்தது.
ஈராக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போர் நடத்தக் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினரைக் கண்டித்து இதுபோன்ற தாக்குதல்கள் நடப்பது வழக்கம் என்றாலும், அதில் அப்பாவி மக்கள் பலியாவது கொடுமையானது.
கர்பாலா தாக்குதலில் ஈடுபட்டது ஒரு பெண்ணாக இருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.