திபெத்தில் நடந்த கலவரங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததோடு இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையை சர்வதேச மனித உரிமைகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
"திபெத்தில் போராட்டம் நடத்தியவர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். சீன ஆட்சியின் மீதான திபெத் மக்களின் அதிருப்தியைத்தான் போராட்டம் நடத்தியவர்கள் வெளிப்படுத்தினர்.
புத்த மதத் தலைவர் தலாய் லாமவிற்கு எதிரான கொள்கைகள், மதச் சுதந்திரத்தில் தலையீடுகள், பண்பாட்டு உரிமைகளில் கட்டுப்பாடுகள், பொருளாதாரக் கட்டுப்பாடுகள் போன்றவை சீன ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி வரக் காரணமாக அமைந்துள்ளது" என்று சர்சதேச மனித உரிமைகள் கூட்டமைப்பு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
மக்களின் கருத்துரிமையையும், அமைதியாகக் கூடிப் போராட்டம் நடத்துவதற்கான உரிமையையும் சீன அரசு மதிக்க வேண்டும் என்று கூறியுள்ள அவ்வமைப்பு, உரிமைக்காகப் போராடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும், போராட்டங்களுக்கான அடிப்படைக் காரணங்களை விரிவாக விளக்கியுள்ள மனித உரிமை அமைப்பு, தலாய் லாமாவுடன் பேச்சு நடத்துவது மட்டுமே பிரச்சனைக்கான சரியான தீர்வாக இருக்கும் என்று கூறியுள்ளது.