திபெத் தலைநகர் லாசாவில் நடைபெற்ற கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்திருக்கக்கூடும் என்று அஞ்சுவதாக புத்தமத தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.
சீனாவின் பிடியில் உள்ள திபெத்தில் புத்த பிட்சுகளும், மக்களும் விடுதலைகோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை இந்த போராட்டம் பெரும் அளவில் வெடித்தது. அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் சீன பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த பகுதியில் இருந்த கடைகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி நொறுக்கியதோடு, வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். இதனால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டது.
அப்போது நடைபெற்ற கலவரத்தில் 10 பேர் பலியானதாக சீன செய்தி நிறுவனம் சின்குவா தகவல் தெரிவித்தது. இதுபற்றி கருத்து தெரிவித்த இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள அந்நாட்டின் புத்தமத தலைவர் தலாய் லாமா, வெள்ளியன்று நடைபெற்ற கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்திருக்கக் கூடும் என்று தான் அஞ்சுவதாக கூறியுள்ளார்.
மேலும், திபெத்திய விவகாரத்தில் சீனா தனது கொள்கையை மாற்றி கொண்டாலன்றி இந்த பிரச்சினை எளிதில் தீராது என்றும் இந்த ஆண்டு சீனாவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.