திபெத் தலைநகரில் கலவரக்காரர்களை ஒடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதால் அந்நகரில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
திபெத், சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வருகிறது. திபெத்தை தனது எல்லைக்குட்பட்ட மாகாணம் என்று சீனா கூறி வருகிறது. எனினும் திபெத்தை சேர்ந்தவர்கள் சுதந்திரம் கேட்டு போராடி வருகின்றனர். பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் திபெத் தலைநகர் லாஷாவிலிருந்து அடுத்த வாரம் தொடங்க இருந்தது.
இந்நிலையில் திபெத்தை சேர்ந்த புத்தமத துறவிகள், சுதந்திர ஆர்வலர்கள் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தை ஒடுக்க சீன பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டதால் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது கலவரம் மூண்டது.
திபெத்தில் சீனர்கள் வசிக்கும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. கலவரக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினர் மேலும் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த கலவரத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதாக சீனா தெரிவித்துள்ளது. எனினும் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று போராட்டகாரர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனிடையே தலைநகர் லாஷாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று ஆணையிடப்பட்டுள்ளது. தலைநகர் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
கலவரக்காரர்களை ஒடுக்க சீனா உறுதியாக இருக்கிறது. மேலும் திபெத்தியர்களின் மத தலைவரான தலாய் லாமாவுக்கு எதிரான பிரச்சாரத்தையும் சீனா தீவிரப்படுத்தி உள்ளது.
இதனிடையே அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள், திபெத் போராட்டம் குறித்து கவலை தெரிவித்துள்ளன. சீனா மிகுந்த எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டுமென்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.