இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த கலித் மெஹ்மூத் இறப்பு குறித்து இந்திய உயர் ஆணைக்குழு அளித்த அறிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துவிட்டது.
'மெஹ்மூத் இறப்பிற்கான காரணங்கள் குறித்த முழுமையான விளக்க அறிக்கையை அளிக்க வேண்டும்' என்று இந்திய உயர் ஆணையக் குழுவை பாகிஸ்தான் கேட்டுள்ளது.
கடந்த 20052ஆம் ஆண்டு ஏப்ரலில் கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்ப்பதற்காக 4 நாட்கள் விசாவில் மெஹ்மூத் என்பவர் இந்தியா வந்தார். உரிய விசா காலம் முடிவடைந்தும் பாகிஸ்தானுக்கு திரும்பாமல் இந்தியாவிலேயே மறைமுகமாக இருந்து வந்துள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டு மே 17-ம் தேதி சம்ஜௌவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் டெல்லிக்கு பயணம் செய்துகொண்டிருந்த போது ஃபரிதாபாத் காவல்துறையினரால் மெஹ்மூத் கைது செய்யப்பட்டார். அவரிடம் சில சர்ச்சைக்குரிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதை பாகிஸ்தான் செல்லும் நபர்களிடம் வழங்குவதற்காக டெல்லி கொண்டுவந்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அவர் மீது அயல்நாட்டினர் சட்டம், கடவுச்சீட்டு சட்டம், ரகசிய காப்புச் சட்டம், இந்திய தண்டனை சட்டம் என பல்வேறு சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஓர் ஆண்டிற்கும் மேலாக திரும்பிச் செல்லாமல் இந்தியாவிலேயே தங்கி இருந்ததால் அவரது விசாவும் காலாவதியானது.
ஃபரிதாபாத் நீதிமன்றத்த்தில் ஆஜர்படுத்தப்பட்ட மெஹ்மூத் மே 25-ம் தேதி முதல் குர்கான் சிறையில் அடைக்கப்பட்டார். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ நிபுணர்களின் அறிவுரைப்படி, கடந்த டிசம்பரில் மெஹ்மூத் குர்கான் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2008 பிப்ரவரி 11-ம் தேதி டெல்லியில் உள்ள சஃப்தார்ஜங் மருத்துவமனைக்கும், பிறகு ஏ.ஐ.ஐ.எம்.எஸ்.-க்கும் மாற்றப்பட்டார். ஆனால், பிப்ரவரி 12-ம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான உயர் ஆணைக்குழுவிற்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. அவரது உடலை பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், 22 நாட்களுக்குப் பிறகு, மார்ச் 5-ம் தேதியே உறவினர்கள் மெஹ்மூத்தின் உடலைப் பெற்று பாகிஸ்தானுக்கு கொண்டு சென்றனர்.
மெஹ்மூத் இறப்பு குறித்து பாகிஸ்தானுக்கு இந்திய உயர் ஆணைக்குழு அளித்த அறிக்கையில், 'அவர் சிறையில் இருந்த காலங்களில் சித்ரவதைக்கு ஆளாகவில்லை. உடல் கூறு பரிசோதனை அறிக்கையும் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.
'மெஹ்மூத் சிறையில் இருக்கும்போது, சரியான நேரங்களில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது' என்று பாகிஸ்தானின் தனியார் சர்வதேச செய்தி தொடர்பு நிறுவனமும் கூறியுள்ளது குறுப்பிடத்தக்கது.
அதேசமயம், மெஹ்மூத் சிறையில் இருந்தபோது சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாக சில பாகிஸ்தான் பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ள செய்திகளை இந்திய உயர் ஆணைக்குழு மறுத்துள்ளது.
முழுமையான அறிக்கை தேவை:
இந்நிலையில் பாகிஸ்தான் அயலுறவு செய்தித்தொடர்பாளர் முகமது சாதிக் கூறிகையில், 'முஹ்மூத் இந்திய சிறையில் இருக்கும்போது சித்ரவதைக்கு ஆளாகவில்லை என்று இந்திய உயர் ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த பத்தரிக்கை செய்திகளையும் அளித்துள்ளது.
ஆனால், முஹ்மூத் இறந்ததற்கான காரணங்கள் விளக்கமாக இல்லை. அதனால், எந்தவித குற்றச்சாட்டும் கூறுவதற்கு பதிலாக விளக்கமான முழு அறிக்கையை அளிக்கும்படியும், விசாரணை குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்ளும்படியும் இந்திய அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.