பாகிஸ்தானின் பிரதமராக மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கணவரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவருமான ஆசிப் அலி ஜர்தாரி நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன.
பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற்று 20 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் புதிய அரசு பதவியேற்கவில்லை. புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதிலும் இழுபறி நிலையே நீடித்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் கூட்டம் இணைத்தலைவர் ஜர்தாரி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தானின் பிரதமராக ஜர்தாரியே இருக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கொள்கை அளவில் முடிவு எடுத்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் அரசியலில் புதிய திருப்பம் உருவாகி உள்ளது.
மேலும், இதுவரை பிரதமராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட பாஹிம்க்கு நாடாளுமன்ற தலைவர் பதவி வழங்கலாம் என்றும் தெரிவித்தனர். ஜர்தாரி பாகிஸ்தான் தேசிய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர்தான் அவர் பிரதமராக பதவி ஏற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.