Publish Date: Tue, 11 Mar 2008 (19:06 IST)
Updated Date: Tue, 11 Mar 2008 (19:06 IST)
ரஷ்யாவில் இருந்து கருங்கடல் வழியாக துருக்கிக்கு சென்ற சரக்கு கப்பல் விபத்தில் சிக்கிய விவகாரத்தில், அதில் பயணம் செய்த 25 இந்தியர்களின் நிலை இன்னமும் தெரியவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இது குறித்து அயலுறவு இணை அமைச்சர் ஆனந்த் சர்மாவிடம் கேட்டதற்கு, "இந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது உறவினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க இந்திய தூதரகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
இந்தியர்கள் இறந்துவிட்டதாக கூறப்படுவதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர், 'இருநாட்டு அரசுகளிடமிருந்தோ அல்லது கடல் போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடமிருந்தோ உரிய தகவல் கிடைக்காமல் எதுவும் தெரிவிக்க முடியாது' என்றார்.
கப்பலை இயக்கிய பெலிகான் மரைன் நிறுவனம் இந்தியர்களின் உறவினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'எம்.வி.ரஷாக் தலைமையில் கப்பலில் பயணம் செய்த 25 இந்திய மாலுமிகளையும் காணவில்லை. மோசமான வானிலையால் அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. எனினும், அவர்களை தொடர்ந்து தேடி வருகிறோம்' என்று தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 18-ம் தேதி நடந்துள்ள இந்த விபத்தில் சிக்கிய இந்தியர்களின் கதி என்ன என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.