இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனுக்கு "மாமனிதர்" விருது வழங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கவுரவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதரை சிங்களம் அழித்துவிட்டது. தமிழினக்கொலைப் பரிமாணத்தின் உச்சமாக திட்டமிட்ட இந்தக் கோரக்கொலை நிகழ்ந்திருக்கிறது.
கிட்டினன் சிவநேசன் அவர்கள் சுயநலம் கருதாது, நேர்மையுடனும் நெஞ்சுரத்துடனும் செயற்பட்ட தனித்துவமான மனிதர். அனைவருடனும் அன்பாகவும் பண்பாகவும் நடந்துகொள்ளும் ஒரு உயரிய பண்பாளர்.
இவர் தமிழீழ மண்ணின் விடிவையும் தமிழீழ மக்களின் விடுதலையையும் தனது வாழ்வின் இலட்சியமாக வரித்துக்கொண்டவர். தமிழ் மக்கள் தமது சொந்தத் தாயக மண்ணில் இன்னல்கள் நீங்கி, இடர்கள் அகன்று, சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாக வாழவேண்டும் என ஆவல் கொண்டவர்.
கிட்டினன் சிவநேசன் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக "மாமனிதர்" என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன்" என்று கூறியுள்ளார்.