சிறிலங்காவில் மனித உரிமை மீறல் குற்றச்சாற்றுகள் பற்றிய விசாரணைகளை மேற்பார்வையிட்டு வந்த சர்வதேச அறிஞர்கள் குழு, தங்களுக்கு அரசிடமிருந்து உரிய ஒத்துழைப்பு கிடைக்காத காரணத்தால் அந்நாட்டில் இருந்து வெளியேறுகிறது.
இதுகுறித்து சர்வதேச அறிஞர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறிலங்கா அதிகாரிகளுக்கும் சர்வதேச அறிஞர் குழுவில் உள்ள சட்ட வல்லுநர்களுக்கும் இடையிலான உறவு மேம்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. சிறிலங்கா அதிகாரிகளின் விசாரணை முறையிலும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
சிறிலங்கா அரசு மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே, சர்வதேச அறிஞர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியும்" என்று கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்திருப்பதாக எழுந்த குற்றச்சாற்றுகளை அடுத்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் இந்தியாவின் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.என்.பகவதி தலைமையில் இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது, மூதூரில் அக்சன் பாம் பணியாளர்கள் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் ஆகியோரின் படுகொலை செய்யப்பட்டது உட்பட 16 மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளின் விசாரணைகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பு இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இருந்தாலும், மனித உரிமை மீறல் குற்றச்சாற்றுகளை விசாரிப்பதில் சிறிலங்கா அக்கறை காட்டவில்லை என்று இந்தக் குழு கடந்த ஆண்டு குற்றம்சாற்றியது.