இலங்கையில் பெரும் அளவில் நடந்துவரும் கடத்தல்கள், காணாமல் போதல்களுக்கு சிறிலங்கா அரசே பொறுப்பு என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குற்றம்சாற்றியுள்ளது.
இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் பற்றிய 99 வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள 241 பக்க அறிக்கையில், சிறிலங்கா அரசின் திறமை இன்மையே குற்றங்களுக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
அப்பாவி மக்களை விசாரணையின்றியும் காரணமின்றியும் கைது செய்வதற்கு சிறிலங்காப் படையினருக்கு சுதந்திரமளிக்கும் சிறிலங்க அரசின் அவசர நிலைச் சட்டங்கள்தான் காணாமல் போதல்களை ஊக்குவிக்கும் சக்தியாக விளங்குகிறது என்றும் அவ்வமைப்பு குற்றம்சாற்றியுள்ளது.
“சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுதான், உலகிலேயே காணாமல் போதல்களை ஊக்குவிக்கும் மோசமான அரசாக இருக்க முடியும்” என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசியப் பிரிவுத் துணை இயக்குநர் எலெய்ன் பியர்சன் கூறினார்.
“போர் நிறுத்த ஒப்பந்தம் முறித்துக்கொள்ளப்பட்ட பிறகு வன்முறைகள் அதிகரித்துவிட்டன. அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் வரை இது தொடரும்.
சிறிலங்காப் படையினரும் காவல் அதிகாரிகளும் செயலற்று உள்ள நிலையில், காணாமல் போதல்களை சகித்துக்கொள்ள முடியாது. இவ்விடயத்தில் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் செயலற்று உள்ளது என்றுதான் கூற வேண்டும்” என்றார் பியர்சன்.