சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, இன்று பிற்பகல் 1.20 மணிக்கு வன்னி கனகராயன்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் படையினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
இதில் சிவநேசன், அவரின் ஓட்டுநர் ஆகியோர் உயிரழந்துள்ளனர்.
கடந்த 1957 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி பிறந்த சிவநேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
சிறிலங்கா நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டுச் சென்ற சிவநேசனை மதவாச்சியில் உள்ள சோதனைச் சாவடியில் சிறிலங்காப் படையினர் நிறுத்தி பயமுறுத்தியதாகவும், அதுபற்றிக் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்த சிவநேசன், தனது உரிமையை மீறும் வகையில் படையினர் செயல்பட்டதாக் குற்றம்சாற்றியதாகவும் புதினம் இணைய தளச் செய்தி கூறுகிறது.
சிவநேசனின் குற்றச்சாற்றுக்கு பதிலளித்த சிறிலங்க அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, வன்னியில் இருந்து வரும் யாராக இருந்தாலும் சோதனைகளைச் சந்தித்தாக வேண்டும் என்று எச்சரித்திருந்த நிலையில், இந்தக் கண்ணிவெடித் தாக்குதலை சிறிலங்க அரசு நடத்தியுள்ளதாக அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.