அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஜான் மெக்கைன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து வருகின்றன.
குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் பதவிக்கு அரிசோனா மாநில செனட்டர் ஜான் மெக்கைன், ஆர்கன்சாங் மாநில ஆளுநர் மைக் ஹக்காபி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. மாநில வாரியாக நடந்த வாக்குப் பதிவில் ஜான் மெக்கைன் அதிக வாக்குகளைப் பெற்று சிறிது முன்னிலை வகித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று ஓகியோ, வெர்மாண்ட், ரோடி தீவு, டெக்சாஸ் ஆகிய 4 மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் ஜான் மெக்கைனுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன.
இதையடுத்து ஆளும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளராக ஜான் மெக்கைன் தேர்வு செய்யப்பட்டார். இத்தகவலை அதிபர் ஜார்ஜ் புஷ் நாளை வெள்ளை மாளிகையில் அதிகாரபூர்வமாக அறிவித்து வேட்பாளரை அறிமுகப்படுத்துகிறார்.
இதேபோல, ஜனநாயகக் கட்சி சார்பில் ஓகியோ, ரோடி தீவு ஆகிய மாநிலங்களில் நடந்த தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றார்.