பாகிஸ்தான் சிறையில் 35 ஆண்டுகளாக இருந்து விடுதலையான காஷ்மீர் சிங்கை இந்திய எல்லையில் அவரின் குடும்பத்தாரிடம் அந்நாட்டு அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
காஷ்மீர் சிங்கை பாகிஸ்தான் மனித உரிமை அமைச்சர் அன்சர் புர்னி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்திய எல்லையான வாகாவுக்கு அழைத்து வந்தார். அங்கிருந்து எல்லையைத் தாண்டி வந்து தனது மனைவியுடன் சென்றார் காஷ்மீர் சிங்.
முன்னதாக, லாகூரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் சிங், இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த போது, "நான் எந்த தவறும் செய்யவில்லை. உளவு பார்க்க நான் பாகிஸ்தானுக்கு வரவில்லை. விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறையில் நான் உயிரோடு இருந்தேன். இப்போது தான் நான் சிரிக்கிறேன். கடைசியாக நான் எப்போது சிரித்தேன் என்று நினைவில்லை. இப்போது வெளி உலகத்தையும், மக்கள் நடமாட்டத்தையும் பார்க்கிறேன். ஏதோ புதிய உலகத்துக்கு வந்ததுபோல் உணர்கிறேன்" என்றார்.
பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப்புக்கும், மனித உரிமை அமைச்சர் அன்சர் புர்னிக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், தன்னைப் போலவே இந்திய சிறைகளில் இருக்கும் பாகிஸ்தானியர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் காஷ்மீர் சிங்கை அந்நாட்டு காவலர்கள் 1973-ம் ஆண்டு கைது செய்தனர். உளவு பார்த்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் அவரது மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. சிறையிலேயே அவர் இருந்தார். கைதானபோது அவருக்கு வயது 32. தற்போது அவருக்கு வயது 67.
இந்தியாவில் இருக்கும் அவரது மனைவி பரம்ஜித் கெளபர், தனது கணவரை விடுதலை செய்யக் கோரி பாகிஸ்தான் அரசுக்கும் இந்திய அரசுக்கும் அடிக்கடி மனு அனுப்பி வந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் மனித உரிமைத் துறை அமைச்சர் அன்சர் புர்னி, சமீபத்தில் லாகூர் சிறைக்குச் சென்றபோது அங்கு காஷ்மீர் சிங், கடந்த 35 ஆண்டுகளாக சிறையில் வாடுவதை அறிந்தார். காஷ்மீர் சிங்கை விடுதலை செய்யலாம் என்று பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப்புக்கு அன்சர் புர்னி பரிந்துரை செய்தார்.
இதையடுத்து காஷ்மீர் சிங்கை விடுதலை செய்ய பிப்ரவரி 28-ம் தேதி முஷாரஃப் உத்தரவிட்டார்.