இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஜூலை மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியாவிற்கு அமெரிக்கா மீண்டும் நெருக்கடி கொடுத்துள்ளது.
இது குறித்து வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் மாளிகையின் இணைப் பேச்சாளர் டாம் கேசே, "அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அது இந்தியா, அமெரிக்காவின் நலன்களுக்கு மட்டுமின்றி அணு ஆயுதப் பரவல் தடை முயற்சிகளுக்கும் நல்லது. அதேநேரத்தில், இந்தியாவிற்கு உள்ள உள்நாட்டு அரசியல் நெருக்கடிகள் எங்களுக்குப் புரிகிறது. முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரச்சனைகளைத் தீர்த்துக்கெள்ள இந்தியாவிற்கு உரிய வாய்ப்புகள் அளிக்கப்படும்" என்றார்.
மேலும், "அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் கருத்தை ஏற்கெனவே கூறிவிட்டனர். அதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால், அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றும் விடயத்தில் அவர்களுக்கும் முக்கியமான பங்கு உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
அணுசக்தி ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை குறித்து விவாதிப்பதற்காக அமெரிக்க அயலுறவு இணையமைச்சர் ரிச்சர்ட் பெளச்சர் இருநாள் பயணமாக இந்தியா வரவுள்ள நிலையில், டாம் கேசே கூறியுள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.