பாகிஸ்தானில் அமையவிருக்கும் புதிய அரசிற்கு யார் தலைமை வகித்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கூறியுள்ளார்.
மேலும், பர்வேஷ் முஷாரஃப் பதவி விலக வேண்டும் என்று பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன என்ற செய்திகளை அவரின் நெருங்கிய நண்பர்கள் மறுத்துள்ளனர்.
இத்தகவல்களை பாகிஸ்தான் ராணுவத்தின் பேச்சாளர், அதிபர் மாளிகை, முஷாரஃப்பின் நண்பர்கள் ஆகியோர் நேற்றிரவு உறுதி செய்ததாக டெய்லி டைம்ஸ் நாளிதழ் செய்தி கூறுகிறது.
இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகியுள்ள மற்றொரு செய்தியில், ராணுவத் தளபதி அஷ்ஃபாக் பர்வேஸ் கியானியைச் சந்தித்த அதிபர் முஷாரஃப், தான் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப் போவதாக கூறிதாகக் கூறப்பட்டுள்ளது.
அதிபர் முஷாரஃப்பின் முகாம் அலுவலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பில், உள்நாட்டு அயல்நாட்டு அரசியல் விவகாரங்கள், பாதுகாப்பு விடயங்கள், பயங்கரவாத எதிர்ப்புப் போரின் தற்போதைய நிலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.