பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் பதவி விலக மாட்டார், அவர் புதிய அரசுடன் இணைந்து செயல்படுவார் என்று அவரது செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதன் மூலம் முஷாரப் தனது பதவியை ராஜினாமா செய்து விடுவார் என்று வந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் அதிபர் முஷாரப்பை ஆதரிக்கும் பாகிஸ்தான் முஸ்லிம்லீக் கட்சி படுதோல்வி அடைந்தது. பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப் தலைமையிலான முஸ்லிம்லீக் கட்சியும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றின.
இவ்விரண்டும் இணைந்து அமையும் கூட்டணி அரசு வரும் வாரத்தில் பதவி ஏற்க உள்ளது.
புதிதாக பொறுப்பேற்கும் அரசு, நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வந்து, முஷாரஃபை பதவி நீக்கம் செய்யும் என்றும், அத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க அவராகவே பதவி விலகி விடுவார் என்றும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில், முஷாரப்பின் செய்தித் தொடர்பாளரும், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியுமான ரஷித் குரேஷி, அதிபர் முஷாரப் ராஜினாமா செய்வார் என்று வெளியான செய்தி தவறானது, அடிப்படை முகாந்திரம் இல்லாதது. அவர் பதவி விலக மாட்டார். புதிய அரசுடன் இணைந்து செயல்படுவார். அதுபோல், தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளும் முஷரப்புடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளன. நவாஸ் ஷெரீப் கட்சி மட்டுமே, முஷரப்புடன் இணைந்து பணியாற்ற எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதுவும் வேடிக்கையானது என்று தனது குறிப்பில் கூறியுள்ளார்.