இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவரும், பெனாசிர் புட்டோவின் கணவருமான ஆஷிப் அலி ஜர்தாரி கூறினார்.
பாகிஸ்தானில் வருகிற 5 ஆம் தேதி பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான அரசு ஆட்சியமைக்க உள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஜர்தாரி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தியத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான எரிசக்தியைப் பாகிஸ்தானால் வழங்க முடியும். பாகிஸ்தானில் உற்பத்தியாகும் பொருட்களை இந்தியச் சந்தைகளில் விற்க முடியும். இதற்கேற்ற வகையில், இருநாடுகளின் மக்களுக்கு இடையிலான உறவை அதிகரித்த பின்னர், வர்த்தக பொருளாதார உறவை வலுப்படுத்த வேண்டும்.
பாகிஸ்தானின் புதிய பிரதமரை இந்திய அரசு அழைத்தால், மற்ற கட்சித் தலைவர்களுடன் நான் டெல்லிக்குச் செல்வேன். இந்தியாவுடன் நல்லுறவை பாகிஸ்தான் விரும்புகிறது என்பதை இந்தியாவுக்கு இதன் மூலம் தெரிவிப்பேன். இரு நாடுகளுக்கும் இடையே அச்ச உணர்வை போக்க முயற்சி எடுப்பேன்.
இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் மேம்பட்டால், அதன் பிறகு மிகவும் சிக்கலான பிரச்சனைகளை அமைதியான சூழ்நிலையில் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும். நம்மிடையே நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் மற்றவர்கள் நம் பிரச்சனையில் தலையிட முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.