அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் மக்களை பயமுறுத்தி வாக்குகளைப் பெறும் முயற்சியில் இறங்கியிருப்பதாக அவருடன் போட்டியிடும் பாரக் ஒபாமா குற்றம்சாற்றி உள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பாரக் ஒபாமா தன்னுடன் போட்டியிடும் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரியை விடச் சற்று முன்னிலையில் இருக்கிறார்.
இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) ஹிலாரி தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில், குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும் காட்சி முதலில் காட்டப்படுகிறது. தேசிய பாதுகாப்பு அவசர நிலை தொடர்பான தொலைபேசி அழைப்பு வந்தால் அதற்குப் பதிலளிக்கக்கூடிய தகுதியானவர் யார் என்ற கேள்வியுடன் விளம்பரப்படம் முடிவடைகிறது.
இதைப்பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள பாரக் ஒபாமா, தோல்வி பயத்தில் மக்களை பயமுறுத்தி வாக்குகளைப் பெறும் முயற்சியில் ஹிலாரி இறங்கியிருப்பதாகக் குற்றம்சாற்றினார்.
இதற்கிடையில், வரும் 4-ம் தேதி ஓஹியோ, டெக்ஸாஸ் ஆகிய முக்கிய மாநிலங்களில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. இதுவரை தொடர்ந்து 11 மாநிலங்களில் நடந்த வேட்பாளர் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள ஒபாமா, இந்த இரண்டிலும் வெற்றிபெற்று விட்டால், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.