பாகிஸ்தானின் தெற்கு வசிரிஸ்தான் மாகாணத்தில் உள்ள மதக் கல்விக் கூடத்தின் மீது நடந்த ஏவுகணைத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயம் அடைந்தனர்.
தெற்கு வசிரிஸ்தானில் ஆஷம் வர்சாக் பகுதியில் உள்ள மதக் கல்விக் கூடத்தின் மீது இன்று அதிகாலை 2 மணிக்கு ஏவுகணைத் தாக்குதல் நடந்ததாகவும், அப்போது ஏற்பட்ட சத்தத்தில் அப்பகுதி முழுவதும் கடுமையாக அதிர்ந்ததாகவும் உள்ளூர்வாசிகளும் அதிகாரிகளும் தெரிவித்தனர்.
இத்தாக்குதலில், கல்விக் கூடத்திற்கு அருகில் உள்ள வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மாணவர்கள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்துள்ளதாக டான் நியூஸ் தொலைக்காட்சி தெரிவித்தது.
கொல்லப்பட்டவர்களில் 10 பேர் அராபியர்கள், மற்றவர்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தாக்குதல் நடப்பதற்குச் சற்றுமுன்பு அப்பகுதியில் பறந்த ஆளில்லா விமானத்தில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டதாகவும், மொத்தம் 3 ஏவுகணைகள் பறந்துவந்து தாக்கியதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இருந்தாலும், கல்விக் கூடத்தின் மீது 1 ஏவுகணை மட்டுமே விழுந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
அமெரிக்கப் படைகள் காரணமா?
இதற்கிடையில், ஆஃப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டுவரும் அமெரிக்கப் படைகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வசிரிஸ்தான் பகுதி ஆஃப்கன் எல்லையில் இருப்பதால் இதுபோன்ற தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதாகவும், சில நேரங்களில் பாகிஸ்தான் படைகள் கூட தாக்குதல் நடத்துவதாகவும் உள்ளூர்வாசிகள் குற்றம்சாற்றினர்.
இதற்கு உதாரணமாகக் கடந்த மாதம், தாலிபான் இயக்கத் தீவிரவாதி பைதுல்லா மசூத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலியான நிகழ்வுகளை அவர்கள் கூறுகின்றனர்.