பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கெளரவமாகத் தன்னைப் பதவியிலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க செனட் அயலுறவுக் குழுத் தலைவர் ஜோசப் பைடன் கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி நடந்த பாகிஸ்தான் பொதுத் தேர்தலைப் பார்வையிட்ட பிறகு அமெரிக்கா திரும்பிய பைடன், நியூயார்க்கில் நடந்த அயலுறவுகள் குழுக் கூட்டத்தில் பேசுகையில், முஷாரஃப்பை தனக்குப் 12 ஆண்டுகளாகத் தெரியும் என்றும், அவர் கெளரவமாகத் தன்னைப் பதவியில் இருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
பொதுத் தேர்தலன்று காலை முஷாரஃப்பைத் தான் சந்தித்த போது அவர், எல்லா முடிவுகளும் நீதிமன்றத்தின் கையில் உள்ளதாகவும், புதிய நாடாளுமன்றம் அமையும் வரை காத்திருக்க விரும்புவதாகவும் தெரிவித்ததாக பைடன் கூறினார்.
"சட்டப்படி பிரதமரை விடக் குறைவான பொறுப்புகளை உடைய அதிபர் பதவியில் இருந்து விலகத் தான் தயாராக உள்ளதாக முஷாரஃப் வெளிப்படையாகத் தெரிவித்தார்" என்று பைடன் கூறினார்.