பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரத்தில் ராணுவத் தலைமையகத்தின் அருகில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் மூத்த படைத் தளபதி உட்பட 8 பேர் கொல்லப்பட்டதுடன் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த மாதத்தில் ராணுவ அதிகாரிகளைக் குறிவைத்து நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ராவல்பிண்டியில் ராணுவத் தலைமைத் தளபதியின் அலுவலகத்திற்கு மிக அருகில் உள்ள பரபரப்பான பகுதியான மால் சாலையில் இன்று மதியம் 2.55 மணிக்கு, மருத்துவச் சேவைப் பிரிவுப் படையின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் முஸ்தாக் அகமது பைக் வந்த காரைக் குறிவைத்து இளைஞர் ஒருவர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளார்.
படைத் தளபதியின் கார் சிக்னலுக்காக நின்றபோது இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் தளபதி பைக் உள்பட 8 பேர் பலியானதாகவும் ராணுவப் பேச்சாளர் ஜாவெத் இக்பால் சீமா தெரிவித்தார்.
"சிக்னல் விளக்குக் கம்பத்திற்கு அருகில் மறைந்திருந்த இளைஞன், படைத் தளபதியின் கார் நின்றவுடன் அதனருகில் ஓடி வந்து தன்னிடம் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான்" என்றார் அவர்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், தற்கொலைத் தாக்குதல் நடத்திய இளைஞர் பிச்சைக்காரனைப் போல வேடமிட்டு நின்று கொண்டிருந்ததாகத் தெரிவித்தனர்.