Publish Date: Mon, 25 Feb 2008 (19:15 IST)
Updated Date: Mon, 25 Feb 2008 (19:15 IST)
மலேசியாவில் சம உரிமைகள் கேட்டுப் போராடும் இந்திய வம்சாவளியினர் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் அடக்குமுறைத் தாக்குதல்களினால், அங்கு ஆளும் பாரிசான் தேசியக் கூட்டணியின் செல்வாக்கு சரிந்துள்ளது.
மலேசியாவில் நாடாளுமன்றம், மாகாண சட்டப் பேரவைகளுக்கு மார்ச் 8 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடந்தது. மொத்தமுள்ள 222 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 505 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 1,500 க்கும் மேற்பட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய வம்சாவளியினரின் மீது மலேசிய அரசு மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான தாக்குதல்களினால் பிரதமர் அப்துல்லா அகமது படாவியின் பாரிசான் தேசியக் கூட்டணியின் செல்வாக்கு சரிந்துள்ளது.
குறிப்பாக, உரிமைக்காகப் போராடிய இந்தியர்களைக் கைது செய்து சிறையில் அடைத்த நடவடிக்கை, பாரிசான் கூட்டணி மீதான மக்களின் அதிருப்திக்குக் காரணமாகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.
தேர்தல் களத்தில் ஹின்ட்ராஃப்!
நாடாளுமன்றத் தேர்தலில் மலேசியாவின் இந்து உரிமை நடவடிக்கை குழு (ஹின்ட்ராஃப்) உறுப்பினர்கள் இரண்டு பேர் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர். இவர்களில் ஒருவர் மலேசிய உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர் ஆவார்.
எதிர்க்கட்சியான டிஏபி சார்பில் ஹின்ட்ராஃப் அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேர் போட்டியிடுகின்றனர்.
ஹின்ட்ராஃபின் முக்கிய தலைவரான சிவநேசன், பெராக் மாகாணத்தில் உள்ள சுன்ட்காய் தொகுதியில் டத்தோ சாமிவேலுவின் மலேசிய தேசியக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வீரசிங்கம் என்பவரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
மலேசிய உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனோகரன், கோட்டா ஆலம்ஷான் என்ற இடத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிங் சூ சென் என்பவரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
தேர்தல் பிரச்சாரம் துவங்கியது!
மலேசியப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் 1,500 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தை இன்று துவக்கினர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 219 இடங்களில் 199 இடங்களை பாரிசான் தேசியக் கூட்டணி கைப்பற்றியது.
இம்முறை, நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 222 இடங்களில் 215 இடங்களில் பாரிசான் தேசியக் கூட்டணி போட்டியிடுகிறது. எதிர்க்கட்சிகள் 220 இடங்களிலும், சுயேட்சைகள் 37 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
சட்டப் பேரவைத் தேர்தல்களில் மொத்தமுள்ள 505 இடங்களில் 502 இடங்களில் பாரிசான் தேசியக் கூட்டணி போட்டியிடுகிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் 539 வேட்பாளர்களும், சுயேட்சையாக 66 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
Webdunia
Publish Date: Mon, 25 Feb 2008 (19:15 IST)
Updated Date: Mon, 25 Feb 2008 (19:15 IST)