சர்வதேசப் பயங்கரவாத இயக்கம் அல் கய்டாவின் தலைவன் ஒசாமா பின் லேடனின் கூட்டாளி என்று கருதப்படும் தாலிபான் ஆதரவு இயக்கத்தின் தலைவன் ஒருவன் லாகூரில் கைது செய்யப்பட்டுள்ளான்.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் தனி அரசு நடத்தி வரும் தாலிபான்களின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் முல்லா உபயத்துல்லா என்பவனை இரண்டு ஆஃப்கானியர்களுடன் லாகூரில் பாகிஸ்தான் உளவு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.
பின் லேடனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகக் கருதப்படும் உபயத்துல்லா லாகூரில் பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உபயத்துல்லா தற்போது இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு கடந்த 2006 ஆண்டு கைது செய்யப்பட்டு 9 மாதங்களுக்குப் பின்பு விடுதலை செய்யப்பட்டு ஆஃப்கனுக்குத் துரத்தப்பட்டான்.
இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தானிற்குள் நுழைந்த உபயத்துல்லா, தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதவளிக்கும் நபர்களிடம் நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டான் என்று உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி டெய்லி டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.