பொதுத் தேர்தலின் முடிவுகளைக் கருத்தில் கொண்டு உடனடியாகப் பதவி விலகுவது பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்பிற்கு நல்லது என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.
இது குறித்து இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
மக்களிடையில் முஷாரஃப்பிற்கு ஆதரவில்லை என்பதைப் பொதுத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் உடனடியாகப் பதவி விலகுவது தான் அவருக்கு நல்லது.
தேசியச் சட்டப் பேரவையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன், முஷாரஃப் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்ற கருத்துடைய உறுப்பினர்கள் அனைவரும் புதன்கிழமை இஸ்லாமாபாத்தில் கூடுகிறோம்.
இதனால், சூழ்நிலையைப் புரிந்து கொண்டு மக்களின் தீர்ப்பை ஏற்று முஷாரஃப் தனது பதவியை விட்டு உடனடியாக விலகவேண்டும். அதுதான் அவருக்கு நல்லது.
எதிர்காலத்தில் அதிபருடன் இணைந்து செயல்படுவது தொடர்பான எந்த முடிவிற்கும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) இணங்காது.
பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக், அவாமி தேசியக் கட்சி ஆகியவற்றிடம் மட்டும், புதிய தேசியச் சட்டப் பேரவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் உள்ளனர். இதனால், மக்களின் தீர்ப்பிற்கு முஷாரஃப் கட்டுப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.