பெப்ஸி நிறுவனத்தின் முதன்மை அதிகாரியும், நிறுவன பங்குதாரரும், அயல்நாடுவாழ் இந்தியருமான இந்திரா நூயி அமெரிக்காவின் 10 சிறந்த பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
சென்னையில் பிறந்தவரான நூயி கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி பெப்ஸிகோ-வின் சி.இ.ஓ.,வாக பொறுப்பேற்றார். கடின உழைப்பையும், திறமையையும் சிறப்பாக வெளிப்படுத்திய நூயி அமெரிக்காவின் சிறந்த பெண் தொழிலதிபர்களில் 10-வது இடத்தை பிடித்துள்ளார். நூயி பொறுப்பேற்ற பிறகு இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 39.47 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
இவ்வளவு சாதனை படைத்த நீங்கள் அமெரிக்க அரசாங்கத்தில் இடம்பெற விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், "நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஊதியம் பெறாத சேவை செய்ய விரும்புவதாகவும், பெப்ஸி நிறுவனத்தில் இருந்து விலகிய பிறகு வாஷிங்டனுக்கு செல்ல இருப்பதாகவும்" கூறுகிறார் உலகின் தலைசிறந்த பெண் தொழிலதிபருமான நூயி.
'அதற்கு இன்னும் சில காலங்கள் ஆகும். பெப்ஸி நிறுவனத்தை திறம்பட நடத்துவதுதான் தற்போதைய பணி. உத்தரவாதம் இல்லாத பங்கு சந்தையில் வெகு நாட்கள் நீடித்திருக்க முடியாது' என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் சிறந்த பெண் தொழிலதிபர் பட்டியலில் மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் கேத்ரின் புர்ஜிக், இணையதள ஏல வர்த்தகர் மேக் விட்மேன், துரித உணவகத்தை நடத்தும் லின்டா லாங்க் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே போப்ஸ் இதழ் நடத்திய ஆய்வில் உலகின் சக்திவாய்ந்த பெண்மணியாக நூயி தேர்ந்தெடுக்கப்பட்டது குறுப்பிடத்தக்கது.