வெனிசுலா நாட்டில் 46 பயணிகளுடன் காணாமல் போனதாக கூறப்பட்ட சாந்தா பார்பரா ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த விமானத்தில் பயணம் செய்த 46 பேரும் பலியானதாக கூறப்படுகிறது.
சாந்தா பார்பரா ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான ஏடிஆர்42 என்ற விமானம் மெரிடா என்னும் இடத்தில் இருந்து 43 பயணிகள், 3 விமான ஓட்டிகளுடன் புறப்பட்டு காரகாஸ் நோக்கி சென்றது.
எனினும் இந்த விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் வானிலை மோசமான காரணத்தால் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விமானம் என்ன ஆனது என்று பரபரப்பு உண்டானது.
இந்நிலையில், இந்த விமானம் வியாழன் அன்று ஒரு மலைப்பகுதியில் விழுந்ததாக அந்த பகுதி மக்கள் தொலைபேசியில் தகவல் தெரிவித்ததாகவும், இதையடுத்து மீட்பு படையினர் அந்த பகுதிக்கு விரைந்துள்ளதாகவும் மெரிடா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் கடல் மட்டத்தில் இருந்து 4,750 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விழுந்து நொறுங்கியுள்ளதால் அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.