கராச்சியில் தடையை மீறி ஊர்வலம் சென்ற வழக்கறிஞர்களுக்கும் அவர்களைத் தடுக்க முயன்ற காவலர்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 3 வழக்கறிஞர்கள் காயமடைந்தனர்.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு அவசர நிலை அமலில் இருந்தபோது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இஃப்திகார் முகம்மது செளத்ரி நீக்கப்பட்டார். அவரையும் அவருடன் பதவி நீக்கம் செய்யப்பட்ட இதர நீதிபதிகளையும் மீண்டும் பதவியில் நியமிக்கக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கராச்சி நகர வழக்கறிஞர்கள் போக்குவரத்து நெரிசல் மிக்க முகம்மது அலி ஜின்னா சாலையில் ஊர்வலமாகச் செல்ல திரண்டனர். அப்போது காவலர்கள் அவர்களிடம் வந்து, ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை என்பதால் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால், வழக்கறிஞர்கள் அதைக் கேட்காமல் ஊர்வலம் செல்ல முற்பட்டனர். தடுத்த காவலர்களையும் அதிபர் முஷாரஃப்பையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இதையடுத்து காவல் துறையினர் தடியடி நடத்தினர். உடனே வழக்கறிஞர்கள் கற்களை எடுத்து வீசியதுடன், சில காவர்களையும் தாக்கினர். இதைத் தொடர்ந்து காவலர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இம்மோதலில் 3 வழக்கறிஞர்கள் காயமடைந்தனர்.