பாகிஸ்தானில் எந்தக் கட்சி தலைமையில் கூட்டணி அமையும் என்று கணிப்பதற்கு நான் அரசியல் கட்சித் தலைவன் அல்ல என்று அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கூறினார்.
இது குறித்து இவர் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான் இடைக்கால அரசின் மீது மக்களுக்கு திருப்தி இல்லை என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன என்பதை ஒப்புக்கொள்ளும் அதே நேரத்தில், பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்ட காரணத்தால் எழுந்த அனுதாப அலையே அவரது கட்சியின் வெற்றிக்குக் காரணம் என்பதையும் மறுக்க முடியாது.
அரசின் மீது மக்களுக்கு உள்ள எதிர்மறையான எண்ணங்களால் கிடைத்துள்ள வெற்றியைப் பயன்படுத்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் பதவியமர்த்த முயற்சி நடக்கிறது. இதில் தலைமை நீதிபதியைத் தவிர மற்றவர்களை மீண்டும் பணியமர்த்த வாய்ப்பு உள்ளது.
பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக யார் வருவார் என்று முடிவு செய்ய வேண்டியது அரசியல் கட்சிகளின் வேலை. அதைக் கணிப்பதற்கு நான் அரசியல் கட்சித் தலைவன் அல்ல.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த 1999 ஆம் ஆண்டு தன்னால் தூக்கி எறியப்பட்ட பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புடன் தற்போது மீண்டும் இணைந்து செயல்பட முடியுமா என் கேள்விக்குப் பதிலளித்த முஷாரஃப், “அரசு பிரதமரின் தலைமையில் இயங்குகிறது. பிரதமரின் அதிகாரத்தை அதிபர் பகிர்ந்து கொள்வது எந்த விதத்திலும் முறையில்லை” என்றார்.
"பிரதமரும் அதிபரும் ஒருவருக்கொருவர் அதிகாரப் போட்டியில் இறங்கினால் நிச்சயமாக மோதல் வெடிக்கும். ஆனால், நாங்கள் அந்த மோதல்களைத் தவிர்த்து விடுவோம் என்று நம்புகிறேன்" என்றார் முஷாரஃப்.