பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பின் எதிர்காலத்தை புதிதாக அமையவிருக்கும் நாடாளுமன்றம் தான் தீர்மானிக்கும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆஷிப் அலி ஜர்தாரி கூறினார்.
இது குறித்து இன்று அவர் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள் இதுநாள் வரை தாங்கள் கண்ட தோல்விகளை தேர்தலின் மூலம் முஷாரஃப்பிற்குத் திருப்பி அளித்து விட்டனர். மக்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாக நாங்கள் எல்லா முடிவுகளையும் நாடாளுமன்றத்தின் மூலமே எடுக்க விரும்புகிறோம்.
நாங்கள் ஜனநாயகத்திற்காகப் போராடுகிறோம். நாடாளுமன்றத்தை வலுவானதாகவும், சுதந்திரமானதாகவும் மாற்ற விரும்புகிறோம். அதேபோல நீதித்துறையும் சுதந்திரமானதாகவும் தன்னாட்சி அதிகாரத்துடனும் இருக்க வேண்டும்.
சுதந்திரமான நீதித்துறை பற்றி நாங்கள் பேசும்போது அதில், பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியமர்த்தும் விடயமும் அடங்கும். நீதித்துறையை நிலைத்தன்மை மிக்கதாகவும், தன்னைப் புதுப்பித்து நிலைநிறுத்திக் கொள்வதாகவும் மாற்ற வேண்டும்.
முட்டாஹிடா குவாமி இயக்கத்தினர் எங்கள் நண்பர்கள் என்ற அடிப்படையில் அவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (க்யூ) கட்சியுடன் கூட்டணி வைப்பது பற்றி எதுவும் கூற முடியாது.
தேர்தல் முடிவுகளில் முறைகேடுகளைச் செய்ய பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிர்பந்திக்கப்பட்டது உண்மைதான் என்றாலும், சதி முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.