கொசோவோவைத் தனிநாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளதாக நார்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டின் அயலுறவு அமைச்சர் யூனாஸ் கார் ஸ்தோர வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்காண்டிநேவிய நாடுகள் உள்ளிட்ட பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள் கொசோவோவை அங்கீகரிக்க உள்ள நிலையில், நார்வேயும் கொசோவோவை அங்கீகரிப்பதுதான் சரியான முடிவென்று கருதுகிறோம்" என்று கூறியுள்ளார்.
மேலும், "1999 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச நாடுகளின் கண்காணிப்பின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வரும் கொசோவோ விவகாரம், மற்ற இனச்சிக்கல் விவகாரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
கடந்த ஆண்டு ஐ.நா. தலைமையில் ஃபின்லாந்தின் முன்னாள் அதிபர் மாத்தி ஆத்திசாரி முன்வைத்த தீர்வுத் திட்டத்தைப் பின்பற்றுவது என்ற கொசோவோ தலைவர்களின் நிலைப்பாட்டிற்கு நார்வே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
கொசோவோ, செர்பியா ஆகிய இருதரப்பினரும் வன்முறைகளைக் கைவிட வேண்டும். கொசோவோவிற்கு உள்ளும் புறமும் பதற்றம் நிலவினால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
கொசோவோவைத் தனிநாடாக அங்கீகரிப்பதன் மூலம், கிழக்கு ஐரோப்பாவை மற்ற ஐரோப்பிய நிறுவனங்களுடன் படிப்படியாக இணைத்துக் கொள்ள வழி ஏற்படும்.
பல ஆண்டுகளாக செர்பியாவுடன் நார்வே பேணி வரும் பரஸ்பர நம்பிக்கை, கூட்டு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதையும் உறுதியாகத் தெரிவிக்கிறோம்" என்று தனது அறிக்கையில் நார்வே கூறியுள்ளது.