பூமியின் மீது விழுந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்த இருந்த அமெரிக்காவின் உளவு செயற்கை கோளை அந்நாட்டு ராணுவம் புதனன்று ஏவுகணை வீசி தாக்கி அழித்தது.
அமெரிக்க கடற்படை கப்பலில் இருந்து அமெரிக்க நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்கு (இந்திய நேரம்- இன்று காலை 9 மணி) வெற்றிகரமாக ஏவப்பட்ட இந்த ஏவுகணை இலக்கை சரியாக தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், அதன் விவரம் உடனடியாக தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவேளை இந்த செயற்கைகோள் சுட்டு வீழ்த்தப்படாமல் மக்கள் அதிகம் உள்ள இடங்களில் வீழ்ந்திருந்தால் அதில் உள்ள 'ஹைட்ரசின்' என்ற வேதிப்பொருள் உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவித்திருக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு அமெரிக்கா இந்த உளவு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது. ஆனால் சிறிது காலத்திற்கெல்லாம் இந்த செயற்கைக்கோள் செயலிழந்தது. இதனால் செயலற்ற நிலையில் விண்ணிலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது. இதனிடையே வரும் மார்ச் மாதம் பூமியில் விழலாம் என்ற நிலையில் இருந்தது.
இதையடுத்து, அதிபர் புஷ் ஆபத்தை விளைவிக்கக் கூடிய இந்த உளவு செயற்கை கோளை பூமிக்கு வரும் முன்னர் விண்ணிலேயே ஏவுகணை வீசி அழிக்க அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.